நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் வைரஸ் தாக்கத்துடன், நாளைய தினம் கொண்டாடவுள்ள தீபாவளி கொண்டாட்டங்களை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் கொண்டாடுமாறு இந்து மக்களிடம், சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி காலப் பகுதியில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதுடன், இந்த காலப் பகுதியில் ஒருவருக்கேனும் கொவிட் தொற்று ஏற்படாத வகையில் செயற்படுமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் ஒன்று திரளாது, தற்போது தங்கியுள்ள இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய ஆபத்தான இடங்களிலிருந்து சொந்த ஊருக்கு சென்று, சொந்தங்களுக்கு தொற்றை பரப்பாதிருக்கும் வகையில் செயற்படுமாறும் சுகாதார பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
நெடுந்தூர பயணங்களை தவிர்த்து, தமது வீடுகளில் இருந்தவாறே தீபாவளியை கொண்டாடுமாறும் சுகாதார பிரிவினர் கோருகின்றனர்.
தமது குடும்ப உறுப்பினர்களுக்கு, நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தொலைபேசியூடாக தொடர்புக் கொண்டு தெரிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
கோவில்கள் மற்றும் பெருந்தோட்ட பகுதிகளில் சமய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல்ககோல் கலந்த திரவங்களை பயன்படுத்தி சுகாதார நடைமுறைகளை கடைபிடித்ததன் பின்னர், விளக்குகளை பிடிக்க வேண்டாம் எனவும், ஆலய மற்றும் வீட்டு வழிபாடுகளின் பின்னர் சவட்காரம் மிட்டு கைகளை கழுவுமாறும் சுகாதார பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கைக்குலுக்குவதை தவிர்த்து, வணக்கம் அல்லது ஆயுபோவான் என கைகளை கூப்பி வாழ்த்து தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த தீபாவளி காலப் பகுதியில் மதுசாரம் அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுக்கின்றது.