திருகோணமலை – கந்தளாய் – சூரியபுர பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விமானப்படை விமானியாக பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த கெடேட் அதிகாரியான இவர், திருகோணமலை சீனகுடா விமானப்படை தளத்தில் கடமையாற்றியுள்ளார்.
கேகாலை – ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதான விமானியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விமானப்படை தெரிவிக்கின்றது.
கேகாலை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை விமானப்படையில் இணைந்துக்கொண்டுள்ளார்.
விமானம் விபத்துக்குள்ளாகிய நிலையில், சுமார் 3 மணித்தியால பிரயத்தனங்களுக்கு மத்தியில் விமானி மீட்கப்பட்டு, திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் திருகோணமலை – சீனகுடா விமானப்படை தளத்திலிருந்து சுமார் 1 மணியளவில் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
விமானம் பயணத்தை ஆரம்பித்து சுமார் 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமானப்படையின் விசேட பிரிவொன்று ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, ருவன்வெல்ல பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு ட்ரூ சிலோன் செய்திப் பிரிவு இன்று சென்றது. (TrueCeylon)