கொழும்பு : 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, பிளவுப்படுத்தப்படாத இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தான் நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் என்பது இரண்டு நாடுளுக்கும் இடையிலான பிரச்சினை மாத்திரம் கிடையாது என தெரிவித்த அவர், அது பொருளாதார மற்றும் சமூக பிரச்சினை எனவும் கூறியுள்ளார்.
கொவிட் தடுப்பு விவகாரத்தில் ஒத்துழைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர், இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் கொள்கை அடிப்படையில், கொவிட் தடுப்புக்காக இலங்கைக்கு, இந்தியாவினால் பாரிய ஒத்துழைப்புக்கள் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலாள பரஸ்பர ஒத்துழைப்பு, பொருளாதாரம், நிதி, வர்த்தகம், பாதுகாப்பு, கடற்றொழில் மற்றும் கொவிட் 19 தொற்று உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கொவிட் – 19 ஒழிப்புக்கான இந்தியாவினால் வழங்கப்பட்ட ஆதரவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமான முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்வதற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. (TrueCeylon)
Discussion about this post