இலங்கையில் தென் பகுதியிலுள்ள தமிழ் பாடசாலைகளில் இதுவரை காலம் முன்னுரிமை வழங்கப்பட்ட தமிழ் மொழிக்கு, தற்போது பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக ட்ரூ சிலோனுக்கு செய்தி பதிவாகியது.
இந்த விடயம் தொடர்பில் ட்ரூ சிலோன் செய்திப் பிரிவு விடயங்களை ஆராய்ந்தது.
மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் அதிகளவிலான மலையக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்காக தமிழ் பாடசாலைகளும் அங்கு இதுவரை காலம் பிரச்சினைகள் இன்றி நடத்தப்பட்டு வந்தன.
எனினும், தற்போது இனவாத செயற்பாடுகள் தமிழ் பாடசாலை வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக கல்வி அதிகாரிகளே இவ்வாறு பாடசாலைகளில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
தெனியாய – மொறவக்க கல்வி வலயத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில், பாடசாலைகளின் பெயர்கள் மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் பாடசாலைகளில், பாடசாலைகளின் பெயர்கள் முதலில் தமிழ் மொழியிலும், இரண்டாவது ஆங்கில மொழியிலும், மூன்றாவது சிங்கள மொழியிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
அதேபோன்று, மேலும் சில பாடசாலைகளின் பெயர்கள், முதலில் ஆங்கிலத்திலும், இரண்டாவது தமிழிலும், மூன்றாவது சிங்களத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்கள மொழி மூன்றாவது இடத்தில் காணப்படுகின்றமையை அடுத்து, பேஸ்புக் தளத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர், இவ்வாறான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தற்போது தெனியாய செல்வகந்தையில்
”இலங்கையில் தாய்மொழிக்கு சென்ற காலம், 1வதும் இல்லை. 2வதும் இல்லை.
தெனியாய மாறை என்சல்வத்த தமிழ் வித்தியாலயம்.
ஓலகந்த பகுதியிலுள்ள இந்த பாடசாலையில்,
தமிழ் அதிபர் உதய குமார
சிங்களத்திற்கு விருப்பம் இல்லையாம்,
குறைந்தது பாடசாலையில் சிங்களம் கற்பிப்பதும் இல்லையாம்..
தெனியாய பாடசாலைகளுக்கு அதிகளவில் பணியாற்றும்
வலய கல்விப் பணிப்பாளர் தம்மிக்கா அம்மையாரே
உங்களின் கவனம் இது தொடர்பில் செலுத்தப்பட வேண்டும்”
இவ்வாறான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், பாடசாலைகளின் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்க முடியாது, சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதையடுத்து, சில பாடசாலைகளின் பெயர் பலகைகள் அழிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
குறிப்பாக என்சல்வத்த தமிழ் கனிஷ்ட வித்தியாலயம், பெவர்லி தமிழ் மகா வித்தியாலயம், அனின்கந்தை தமிழ் கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் பெயர் பலகைகள் அழிக்கப்பட்டுள்ளன.
சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கி, பாடசாலை பெயர் பலகைகளை அமைக்குமாறு உயர் கல்வி அதிகாரிகள், பாடசாலைக்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, தமிழ் மொழிக்கான அங்கீகாரம் மற்றும் தமிழர்களுக்கான அங்கீகாரம் தென் பகுதியில் மறுக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் அங்கலாய்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (TrueCeylon)


Discussion about this post