கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
கடும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சில பகுதிகளில் தளர்த்தப்பட்டாலும், பல பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதன்படி, மட்டக்குளி, கரையோரம் மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டித் தெரு, டாம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொட, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கான தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், கொம்பனிவீதி பொலிஸ் பிரிவின் செகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாதமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியவற்றுக்கான தனிமைப்படுத்தலும் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளி பொலிஸ் பிரிவிலுள்ள ரந்திய உயன வீடமைப்பு திட்டம் மற்றும் பெர்கியுசன் வீதியின் தென் பகுதி ஆகியன இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் லக்சந்த செவன வீடமைப்பு திட்டம், சாலமுல் கிராம உத்தியோகத்தர் பிரிவு, விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மற்றும் ராகம ஆகிய பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதுடன், வத்தளை, பேலியகொட மற்றும் களனி ஆகிய பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பகுதிகள் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் என கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். (True Ceylon)