காலி – தேத்துகொட பகுதியில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த ஒருவரின் ஜனாஸாவை, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைகளின் பிரகாரம் இறுதிக் கிரியைகளை நடத்துமாறு காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜீவனி பத்திரண உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுகாதார சேவை பணிப்பாளரின் உத்தரவு கிடைக்கப் பெறும் வரை, ஜனாஸாவை குளிரூட்டியில் வைக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கொவிட் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்பது தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றமையினால், கலந்துரையாடலில் தீர்மானம் எட்டப்படும் வரை ஜனாஸாவை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அனுமதியளிக்குமாறு உயிரிழந்தவரின் சார்பான முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்த 84 வயதான ஷேக் அப்துல்காதர் மொஹமட் சனுஷி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையின் உயிரிழப்பு குறித்து காலி தலைமை பொலிஸார், நீதிமன்றத்தில் விடயங்களை தெளிவூட்டியுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய, குறித்த ஜனாஸாவை தகனம் செய்யுமாறு காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பதில் சட்ட வைத்திய அதிகாரி சந்திரசேன லொகுகே உத்தரவிட்டிருந்தார்.
தகனம் செய்ய வேண்டும் என்றால், ஜனாஸாவை பொறுப்பேற்க முடியாது எனவும், அடக்கம் செய்வதாக இருந்தால் மாத்திரமே ஜனாஸாவை பொறுப்பேற்பதாகவும் அவரது புதல்வர் தெரிவித்திருந்த நிலையிலேயே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். (TrueCeylon)