கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, தெரிவு செய்யப்பட்ட ஒரு இடத்தில் நல்லடக்கம் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்ததாக அமைச்சர் கூறுகின்றார்.
எவ்வாறாயினும், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்பட்டதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார்.
எனினும், எந்தவித இறுதித் தீர்மானமும் எட்டப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
தற்போதுள்ள தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பேஸ்புக் தளத்தில் தீர்மானம் எட்டப்பட்ட விதத்தில் வெளியிட்ட கருத்தை அடுத்தே, இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார்.