சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000தை எட்டியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2984 பேர் கைதிகள் எனவும், 103 பேர் அதிகாரிகள் எனவும் திணைக்கள் மேலும் குறிப்பிடுகின்றது.
பாதிக்கப்பட்ட கைதிகளில் 2795 பேர் ஆண்கள் என சுட்டிக்காட்டியுள்ள திணைக்களம், எஞ்சிய 189 பேர் பெண்கள் எனவும் கூறியுள்ளது.
கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக 4 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தான் பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கிய போதிலும், அதனை அவர் நடைமுறைப்படுத்தவில்லை என சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா தெரிவிக்கின்றார்.
புதிய சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கான கட்டிடத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை குறைப்பதற்கான ஆலோசனைகளை தான் கடந்த ஏப்ரல் மாதமே வழங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்னால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை பின்பற்றி, கைதிகளின் எண்ணிக்கையை குறைத்திருந்தால், மஹர சம்பவம் நேர்வதற்கான சாத்தியம் இருந்திருக்காது எனவும் அவர் தெரிவிக்கின்றார். (TrueCeylon)