கொழும்பு புதுக்கடை உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தீ பரவிய விதம் தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பிரபல சிங்கள பத்திரிகையொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சிகரட் ஒன்றினாலேயே தீ பரவியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் மேல் மாடியில் சட்டத்தரணிகளினாலோ அல்லது ஊழியர்களினாலோ வீசப்பட்ட சிகரட்டினாலேயே, தீ பரவியிருக்கக்கூடும் என்ற விதத்தில் சிசிடிவி ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 15ம் திகதி உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் பாரிய தீ பரவியிருந்தது.
இந்த தீ விபத்தானது திட்டமிட்ட செயலாக இருக்காது என அரச பகுப்பாய்வாளர்களின் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இந்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர், அங்கு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 4 சிகரட் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சிகரட் புகைப்பதற்கான இந்த இடம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இடத்தில் தீ பரவக்கூடிய வகையிலான பொருட்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிகரட் புகைத்தவர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டுவதற்காக மேலும் 30 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதுவரை விசாரணை செய்யப்பட்ட 30 பேரும், சிகரட் புகைப்பதில்லை என விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர். (TrueCeylon)