கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், நிர்ணயிக்கப்பட்ட திகதியில் பரீட்சைகளை நடத்துவதற்கு தொடர்ந்தும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இதனைக் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகள், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடத்துவதற்கு கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் தொடரும் அசாதாரண நிலைமை காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை நடத்துவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதை அவர் தெளிவூட்டினார்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளை தவிர, ஏனைய அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
இவ்வாறான நிலையில், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தீர்மானமொன்றை எட்ட எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், குறித்த பகுதிகளிலுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இரு வாரங்களுக்குள் ஆரம்பிக்க முடியாது போனால், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை திட்டமிட்ட வகையில் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் கூறுகின்றார்.
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளில், குறித்த வகுப்புக்களை ஆரம்பிக்க முடியாத பட்சத்தில், மாற்று திட்டங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் கல்வி அமைச்சர் கூறுகின்றார்.
அந்த பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாது போனால், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்காக நிர்ணயிக்கப்பட்ட திகதியில் மாற்றத்தை ஏற்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானமொன்று எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த அனைத்து தீர்மானங்களும் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் எட்;ட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.