விசேட தேவையுடைய மாணவன் ஒருவன், புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றமை தொடர்பில் அவரது ஆசிரியையான ஹிருஷி நதீஷானி எழுதிய பதிவு, இன்று பல்லாயிரக்கணக்கில் பகிரப்பட்டு, வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
தெஹிவளை – கரகம்பிட்டிய விஜய வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவனே, இவ்வாறு சித்தி பெற்றுள்ளார்.
பல சவால்களை எதிர்நோக்கி, சாதனை படைத்த இந்த மாணவன் குறித்து, அவரது ஆசிரியை எழுதிய கடிதம் தமிழ் மொழியில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
மிக உருக்கமாக எழுதியுள்ள கடிதம், அந்த மாணவனுக்கு நம்பிக்கையை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
மகனே!… இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாள் எனக்கு. கதைக்க முடியாது என்றாலும், எழுத முடியாது என்றாலும், விசேட தேவையுடையவர்களின் கீழ் எனது மகன் 99 புள்ளிகளை பெற்று பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார். அது இலகுவான விடயமல்ல மகனே… உங்களை சமூகம் ‘மொங்கல் புதா” (லூசு பையன்) என்றே அடையாளப்படுத்துகின்றது. எனினும், உங்களின் தாய்க்கு நீங்கள் சாதாரண மகன். உங்களுக்கான பாடசாலையை தேடி, உங்களின் தாயும், தந்தையும் செல்லாத இடமில்லை. எனினும், இவ்வாறான மாணவனுக்கு, இந்த பாடசாலைகள் சரிவராது என கூறிவிட்டார்கள். இறுதியான நீங்கள் கரகம்பிட்டிய விஜய வித்தியாலயவிற்கு வந்தீர்கள். சாதாரண மாணவர்கள் கல்வி பயிலும், வகுப்பறையில், சாதாரண மாணவரை போன்று நீங்கள் இருக்க வேண்டும் என உங்களின் தாய் நினைத்தார். இறுதியில் அதிபர் சவாலை ஏற்றுக்கொண்டார். இறுதியில் அந்த சலாலை வெற்றி கொண்டீர்கள். விசேட தேவையுடைய மாணவர்களுக்கான புலமை பரிசில் கிடைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. உங்களுக்கு பல தடைகள் வந்தன. இந்த மாணவனுக்கு பரீட்சை எழுத விட முடியாது என கூறப்பட்டது. இறுதியில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் மகனே. அனைத்து தடைகளையும் வெற்றிக் கொண்டீர்கள். யாராலும் தற்போது பேச முடியாது. ஏனென்றால், எனது மகன், அனைவரது வாயையும் அடைத்து விட்டார். 6 மாதங்கள் என்ற குறுகிய காலமே, உங்களுக்கு கல்வி பயிற்றுவிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அது எனது அதிஷ்டம். எஞ்சிய சவால்களை அரந்தர ஆசிரியை பொறுப்பேற்றார். இனி உங்களை யாராலும் நிறுத்த முடியாது என்பதை நான் அறிவேன். முன்னோக்கி செல்லுங்கள். ஒரு நாள் யாருமே எண்ணிப் பார்க்காத இடத்திற்கு எனது மகன் வருவான்.
உங்களின் சமிக்ஞை மொழியில் கூறினால், ”உயரமான டீச்சர்”
(ஆசிரியையின் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளமையினாலேயே ”மொங்கல் புதா” (லூசு பையன்) என்ற வசனத்தை இந்த செய்தியில் நான் இணைத்துள்ளேன். இது யாரையும் மனவேதனைப்படுத்துவதற்காக அல்ல.)