உலகம் முழுவதும் கொவிட் தொற்று வெகுவான அதிகரித்து வருகின்றதை போன்றே இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் கொரோனா தொற்றாளர்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களின் நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை மூடப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காகவும், பொருட்களை இறக்குமதி செய்வதற்காகவும் மாத்திரமே விமான நிலையங்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறான பின்னணியில், இந்துக்களின் விரதமான சபரிமலை விரதம் இந்த மாதம் 16ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றது.
இவ்வாறான நிலையில், இந்தியாவிலுள்ள சபரிமலை செல்வதற்கு இலங்கை அரசாங்கம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமா என்ற கேள்வி விரதத்தை கடைபிடிக்கும் பலரது மனதிலும் எழுந்து வருகின்றது.
இந்த விடயத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ட்ரூ சிலோன் இணையத்தளம், புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத விவகார அமைச்சின் ஊடகச் செயலாளர் ஜே.யோகராஜை தொடர்புக் கொண்டு வினவியது.
சபரிமலைக்கு யாத்திரிகர்கள் செல்வது குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டவில்லை என அவர் குறிப்பிட்டார்.
சபரிமலைக்கு யாத்திரிகர்களை அனுப்புவதற்கான எந்தவொரு திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை என கூறிய அவர், அவ்வாறான திட்டங்கள் எதுவும் இருக்குமாயின் அந்த விடயம் ஊடகங்களின் ஊடாக அறிவிக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.