கொரோனா தொற்று 2019ஆம் ஆண்டு சீனாவிலேயே உருவாகியமை நாம் அனைவரும் அறிந்த விடயம்.
சீனாவில் மிக வேகமாக பரவிய கொவிட் தொற்று சிறிது காலத்திலேயே அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில், அதிக கொவிட் தொற்றாளர்கள் மற்றும் கொவிட் உயிரிழப்புக்கள் பதிவான முதலாவது நாடாக இருந்த சீனாவின் இன்றைய நிலைமை தொடர்பில் ட்ரூ சிலோன் ஆராய்ந்தது.
கொரோனா தொடர்பான தரவுகளை வெளியிடும் இணையத்தளத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விடயம் ஆராயப்பட்டது.
கொரோனா தொற்றினால் அதிக பாதிப்புக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவின் ஒரு கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 029 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்ததாக இந்தியாவிலேயே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் கொவிட் தாக்கம் காரணமாக 93 லட்சத்து 51 ஆயிரத்து 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 238 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் தொற்று அதிகம் ஏற்பட்ட நாடுகள் பட்டியலில் பிரேஸில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பிரேஸிலில் 62 லட்சத்து 38 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 998 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், இந்த நாடுகள் பட்டியலில் சீனா எந்த இடத்தில் உள்ளது என ஆராய்ந்தோம்.
இந்த நாடுகளில் நிகழ்ந்த உயிரிழப்புக்களை விடவும், சீனாவில் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தற்போது குறைவாக காணப்படுகின்றன.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் சீனா இன்று 70ஆவது இடத்தில் உள்ளது.
சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 501 ஆக பதிவாகியுள்ளதுடன், 4 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆகும்.
உலகம் முழுவதும் 6 கோடியே 20 லட்சத்து 83 ஆயிரத்து 384 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 14 லட்சத்து 51 ஆயிரத்து 140 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோடிக்கணக்கானோரை பாதிப்படைய செய்த ஆரம்ப புள்ளியாக இருந்த, சீனா இன்று அந்த ஆபத்திலிருந்து மீட்டெழுந்துள்ளது என்ற கூற முடிகின்றது.