இலங்கை சினிமா திரையரங்குகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள கலைஞர்களுக்கு தேசிய திரைப்படக் கூட்டுதாபனம் நிவாரணங்களை வழங்க தீர்மானித்துள்ளது.
தேசிய திரைப்படக் கூட்டுதாபனத்தின் காட்சி சபையான ரித்மா சபைக்கு சொந்தமான கூட்டுதாபனத்துடன் உரிய முறையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் அனைத்து சினிமா திரையரங்குகளுக்கும் மூன்று மாத காலம் ஒரு லட்சம் ரூபா வீதம் நிவாரண உதவிகளை வழங்க தேசிய திரைப்படக் கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.
கூட்டுதாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாஸவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, மூன்று மாத காலத்திற்கு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய தேவைகளுக்காக 50,000 ரூபாவையும், எஞ்சிய 50,000 ரூபாவை பகுதியளவில் செலுத்தும் வகையிலான கடன் அடிப்படையிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திரைப்படக் கூட்டுதாபனத்தினால் திரைப்பட கலைஞர்களுக்காக செலுத்தப்படும் ஓய்வூதிய கொடுப்பனவு தொகையான 5000 ரூபாவை மூன்று மாத காலத்திற்கு, குறித்த தினத்திற்கு முன்னதாகவே செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, திரைப்பட கூட்டுதாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாஸவின் தலைமையில் இயங்கும் சினிமா கலைஞர்களின் அமைப்பான சினேஸ்டார் நிதியத்தின் ஊடாக 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை வழங்கும் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை இலங்கை திரைப்பட கூட்டுதானம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.