கொவிட் 19 தடுப்பூசியின் முதலாவது தொகுப்பை இந்தியா அங்கீகரிக்கும் எண்ணத்தில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொடர்பிலான 22ஆவது உயர்மட்ட குழுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒரு கோடியை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னணியிலேயே, காணொளி தொழில்நுட்பம் மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள சுமார் 30 கோடி பேருக்கு இந்த தடுப்பு மருந்தை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக விடாமுயற்சியுடன், நடந்துக்கொள்ள வேண்டும் என்ற தனது அக்கறையை சுகாதார அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மதிப்பிடப்பட்டுள்ள சுமார் 30 கோடி மக்களுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்குவதன் அவசியம் குறித்தும் அவர் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த 12 மாதங்களாக கொவிட் தொற்றுக்கு எதிராக செயற்பட்டு வரும் அனைவருக்கும், அவர் இதன்போது தனது நன்றிகளை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொவிட் 19 தொற்றின் அளவு 2 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், உலகத்துடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு வீதம் 1.45 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கை 95.46 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மில்லியன் மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட விதம் 6.25 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகளவிலான விழாக்கள் காணப்பட்ட போதிலும், தம்மால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக புதிய தொற்றாளர்கள் பெருமளவில் அடையாளம் காணப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். (TrueCeylon)