கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று வெளியிட்டுள்ளார்.
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் பூதவுடல்களை அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
முஸ்லிம் மக்கள் மாத்திரமன்றி, கத்தோலிக்க மக்களும் அடக்கம் செய்வதற்கான கோரிக்கையை விடுத்து வருவதாக நீதி அமைச்சர் கூறுகின்றார்.
எனினும், கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான கோரிக்கையை, முஸ்லிம் மக்களே அதிகளவில் விடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
ஏனைய நாடுகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோரிக்கையை ஏற்று செயற்படுகின்றமையினால், அரசாங்கம் என்ற விதத்தில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
நாட்டில் கொவிட் தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள பின்னணயில், முஸ்லிம் மக்கள் மிகவும் வேதனை அடைந்த நிலையிலேயே, ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்து மீண்டும் சமூகத்தில் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
அமைச்சரவையில் உள்ள ஒரேயொரு முஸ்லிம் தான் என்பதனால், தானே இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த விடயம் தொடர்பிலான கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்தது தான் எனவும், அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அலி சப்ரி கூறுகின்றார்.
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அமைச்சரவைக்குள் எந்தவித எதிர்ப்பும் கிடையாது என்ற போதிலும், இதற்கான தீர்மானத்தை அமைச்சரவையினால் எடுக்க முடியாது என அவர் குறிப்பிடுகின்றார்.
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரே எடுக்க வேண்டும் என்பதையும் தான் ஏற்றுக்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், மேற்குலக நாடுகள் என அனைவரும் கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என கூறும் போது, ஏன் இலங்கையில் செய்ய முடியாது என அவர் கேள்வி எழுப்புகின்றார்.
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக கோரிக்கையானது, முஸ்லிம் என்ற அடிப்படையில் அன்றி, அனைத்து தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளமையினாலேயே கோரப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
முஸ்லிம் மார்க்கத்தில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளமையினால் மாத்திரமே, இந்த மத அடிப்படையிலான சர்ச்சையாக மாறியுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடுகின்றார்.