கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நபர்கள் வீதிகளில் வீழ்ந்து உயிரிழப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்றை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கண்டி – கட்டுகஸ்தோட்டை – எகொடவத்த பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வீதிகளில் பலர் வீழ்ந்திருப்பதை போன்று வெளியான சில படங்கள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்திருந்தது.
வீதிகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் வீழ்ந்து உயிரிழப்பதாகவும் செய்திகள் பகிரப்பட்டு வந்திருந்தன.
எனினும், இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் வீதியில் வீழ்ந்து இதுவரை ஒருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
யாசகர் ஒருவரே வீதியில் உயிரிழந்திருந்ததுடன், அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்றிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், வீதிகளில் வீழ்ந்த வேறு எவரும் உயிரிழக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.