உலக கொவிட் தொற்று பதிவாகும் நாடுகள் பட்டியலில் இலங்கை 100ஆவது இடத்தில் உள்ளது.
உலக கொவிட் தொற்று தொடர்பிலான தகவல்களை வெளியிடும் இணையத்தளத்தின் தரவுகளுக்கு அமைய, ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் 146ஆவது இடத்தில் இலங்கை இருந்துள்ளது.
எனினும், மினுங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பதிவான கொவிட் தொற்றாளர்கள் மற்றும் பேலியகொட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
இன்றைய தினம் புதிதாக பதிவான 544 கொவிட் தொற்றாளர்களுடன் இலங்கை 100ஆவது இடத்தை நோக்கி பின்தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை 17,127 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
11,495 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, 5,579 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், இலங்கையில் இதுவரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 387 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.
கொவிட் தொற்றினால் அதிக பாதிப்புக்களை கொண்ட நாடுகளில் முறையே அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின், பிரித்தானியா, ஆர்ஜன்டினா, கொலம்பியா, இத்தாலி ஆகியன காணப்படுகின்றன.
கொவிட் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 5 கோடியே 44 லட்சத்து 49 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 13 லட்சத்து 20 ஆயிரத்து 273 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 கோடியே 79 லட்சத்து 65 ஆயிரத்து 134 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும், 98 ஆயிரத்து 181 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக உலக கொவிட் தொற்று தொடர்பிலான தகவல்களை வெளியிடும் இணையத்தளம் தெரிவிக்கின்றது.