பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்களின் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் இல்லத்தை மூடி, தமது ஊர்களுக்கு சென்றமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு வீடுகளுக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க சென்ற போது, வீடுகள் மூடப்பட்டிருந்ததை அடுத்து, இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று பரவிய விதம் குறித்து புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் மாஅதிபரின் கீழுள்ள பொலிஸ் விசேட அதிரடிபடையின் ஊடாக இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
639 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 3740 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.