கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 6 பொலிஸ் பிரிவுகளுக்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை முதல் தளர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பொரள்ளை, கொழும்பு – கோட்டை, வெல்லம்பிட்டி மற்றும் கொம்பனிவீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாதவில்லு கிராம உத்தியோகத்தர் பிரிவும், கொம்பனிவீதியின் சகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்க்கான செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
கம்பஹா மாவட்டத்தில் கடவத்தை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.
எனினும், கொழும்பு மாவட்டத்தின் 13 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தின் 5 பொலிஸ் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், கரையோரம், ஆட்டுப்பட்டிதெரு, மாளிகாவத்தை, தெமட்டகொட, வாழைத்தோட்டம், மருதானை, புறக்கோட்டை மற்றும் டாம் வீதி ஆகியன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ராகம, வத்தளை, பேலியகொட மற்றும் களனி ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.