தொழிற்சங்கங்களுடன், பெருந்தோட்ட கம்பனிகள் கைச்சாத்திட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து, சம்பள நிர்ணய சபையொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக மாத்திரமே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியும் என தொழில் அமைச்சு, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம், மேலதிகமாக 50 ரூபாவை மாத்திரம் பெற்றுக்கொடுத்து நாள் சம்பளமாக அதிக பட்சம் 750 ரூபாவை மாத்திரமே பெற்றுக்கொடுக்க முடியும் என அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
700 ரூபா அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமாக, வருகை கொடுப்பனவு, உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை உள்ளடக்கி, 920 ரூபாவையே பெற்றுக்கொடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
920 ரூபா சம்பளத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள தொழிற்சங்கங்கள், 1000 ரூபா அடிப்படை நாள் சம்பளத்தை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Aruna)
Discussion about this post