கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவரொன்று இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கிளிநொச்சி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவந்த கடும் மழையுடனான வானிலையினால், குறித்த பகுதியில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாக செய்தியாளர் கூறுகின்றார்.
வெள்ள நீர் தேங்கியிருந்த நிலையிலேயே, வீட்டின் சுவர் ஈரமடைந்து, இடிந்து வீழ்ந்துள்ளது.
கிளிநொச்சி – தொண்டமான்நகர் பகுதியைச் சேர்ந்த 8 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுவர் உடைந்து வீழ்ந்த இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த சிறுவனை, பிரதேச மக்கள் காப்பாற்றியுள்ளதுடன், சிறுவனை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறுவனுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.