கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வுகள் இயற்கையாக ஏற்பட்டவை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.
சுன்னாம்பு கற்கள் அல்லது கருங்கற்களை உடைப்பதினால், இந்த நில அதிர்வுகள் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலஅதிர்வுகளை எண்ணி எதிர்வரும் காலங்களில் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி பகுதியில் அண்மையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட 12 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவின் அறிக்கை, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சில் வைத்து அந்த அறிக்கை கையளிக்கப்பட்டதை அடுத்தே, அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலஅதிர்வுகளினால் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலஅதிர்வுகளை விட, 10 மடங்கு பெரிய நிலஅதிர்வுகள் ஏற்பட்டாலும், விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நிபுணர்கள் குழுவினால் கையளிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்து 100 மீற்றர் தொலைவில் உள்ள சுன்னாம்பு கல் குவாரிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
சுன்னாம்பு கல் குவாரிகள் தொடர்பில் முழுமையாக ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post