கண்டி – திகண மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அண்மை காலமாக ஏற்படும் நிலஅதிர்வுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கண்டியில் தொடர்ச்சியாக பதிவாகும் நிலஅதிர்வுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சுற்றாடல் அமைச்சு, புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராச்சி பணியகம் உள்ளிட்ட தரப்பினர் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலஅதிர்வுகளினால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படக்கூடுமா என்பது தொடர்பில் புத்திஜீவிகள் குழுவொன்று விசேட ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் ஆரம்ப அறிக்கை தம்மிடம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அறிக்கையின் பிரகாரம், நாட்டிற்கு இந்த நிலஅதிர்வினால் எந்தவித பாதிப்பும் கிடையாது என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், எமது நாட்டிற்கு பூமிஅதிர்ச்சிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடையாது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலஅதிர்வு ஏற்படுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், நிலஅதிர்வுகள் தொடர்பில் தொடர்ந்தும் விரிவாக ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார். (TrueCeylon)