சில் துணி வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு, மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டிய ஆகியோரை, அந்த வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குமுதுனி விக்ரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவின் ஊடாக நாடு பூராகவும் உள்ள விஹாரைகளுக்கு சில் துணி பகிர்ந்தளிக்கப்பட்டதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையிலேயே, குறித்த இருவரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு, 3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பிலான மேன்முறையீடு செய்யப்பட்ட பின்னணியிலேயே இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.