இலங்கையிலுள்ள தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களின் ஆகக்குறைந்த கல்வி தகைமை, கல்வி பொது தராதர சாதாரண தரம் (O/L) என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவொன்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளின் அலைவரிசைகளை உரிய வகையில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவே, இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த குழுவின் தலைவராக சட்டத்தரணி ஜயந்த பெர்ணான்டோ செயற்பட்டுள்ளார்.
குழுவின் உறுப்பினர்களாக சட்டத்தரணி குஷான் டி அல்விஸ், ஜனாதிபதி மேலதிக செயலாளர் ஜீவந்தி திஸாநாயக்க ஆகியோர் செயற்பட்டுள்ளனர்.
குறித்த குழு, தமது அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக அறிய முடிகின்றது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட அறிக்கை, உத்தியோகப்பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை.
எனினும், அரசாங்கத்திற்கு சார்பான இணையத்தளமாக விளங்கும் emanisalk இணையத்தளம் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளதாக த லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.
அலைவரிசைகளை பெற்றுக்கொண்ட பெரும்பாலான ஊடக நிறுவனங்கள், அவற்றை தம்வசமே வைத்திருப்பதாக அந்த குழுவின் அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சிகளின் அலைவரிசைகள், ஒன்றுக்கு ஒன்று பரஸ்பரமாக ஒளிபரப்பப்படுகின்றமையினால், தெளிவின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால், இலங்கையில் சுமார் 2 மில்லியனுக்கும் அண்மித்த வீடுகளில் கேபள் மற்றும் IPTV பயன்படுத்தப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் சுமார் 1.5 மில்லியன் பேர் டயலொக் (Dialog) செய்மதி இணைப்புக்களை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளினால் கொள்வனவு செய்யப்பட்ட அலைவரிசைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் ஹெல உறுமய சார்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோர் அலைவரிசைகளை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஹெல உறுமயவினால் கொள்வனவு செய்யப்பட்ட அனுமதி பத்திரம் மற்றும் அலைவரிசை ஆகியன, நஹில் விஜேசூரியவிற்கு சொந்தமான Peoples Media நிறுவனத்திற்கு 75 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதன்பின்னர், நஹில் விஜேசூரிய, பௌத்த தொலைக்காட்சிக்காக மாதாந்தம் 6.7 மில்லியன் ரூபாவிற்கு அதனை குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியினால் கொள்வனவு செய்யப்பட்ட அலைவரிசை, V FM என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, 100 மில்லியன் ரூபாவிற்கு ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
UTV தொலைக்காட்சி சேவை, வேறு பணிப்பாளர்களின் பெயர்களில் நடத்தி செல்லப்பட்டாலும், அதன் உரிமையாளராக தொடர்ந்தும் ரிஷாட் பதியூதீன் இருக்கின்றார் என குழு அறிவித்துள்ளது.
அதேபோன்று EAP Network நிறுவனத்தை, சுபாஷ்கரன் அல்லிராஜா கொள்வனவு செய்துள்ளார்.
இந்த கொடுக்கல் வாங்கல்களை Lyca Mobile நிறுவனம் சட்டவிரோதமான முறையிலேயே முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளதாக அந்த குழு கூறியுள்ளது.
அலைவரிசைகளை மீள கைப்பற்றுவதற்கு தயார்!
இலத்திரனியல் ஊடக நிறுவனங்களினால் சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டுள்ள அலைவரிசைகளை, மீண்டும் அரசாங்கம் கையேற்றும் நோக்குடனேயே ஜனாதிபதி இந்த குழுவை நியமித்துள்ளதாக த லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இலத்திரனியல் ஊடக அலைவரிசைகளை வழங்கும் போது, விலை மனுக்கோரலின் ஊடாக அவற்றை உரிய நடைமுறைகளை பிற்பற்றி வழங்குவதற்காக ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
தனியார் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களை, சரியான முறையில் நடத்திய செல்ல அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இராணுவத்தினால் விரைவில் தொலைக்காட்சி சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக த லீடர் குறிப்பிடுகின்றது.
NEWS SOURCES :- THE LEADER