ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு கடந்த 10 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் மத்ரஸா பாடசாலையின் அதிபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியமைக்கான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதேவேளை, புத்தளம் பகுதியில் மத்ரஸா பாடசாலையொன்றின் ஊடாக இனவாத விடயங்களை கற்பித்த குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் அதிபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
10 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மாஅதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, குறித்த இருவரும் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர். (TrueCeylon)
Discussion about this post