3ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையான வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை தொலைக்காட்சியின் ஊடாக கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது
அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு, பல்கலைக்கழகம் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி நிகழ்ச்சிகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை (16) அதிகாலை 4 மணி முதல் ஒளிபரப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ச்சியாக 10 வாரங்கள் இந்த ஒளிபரப்பு இடம்பெறவுள்ளதுடன், நேர அட்டவணைக்கு அமைய 7 நாட்களும் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக 1377 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், 0117601702 மற்றும் 071449131 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனும் அழைப்பை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.