ஒரு வகை மண் ஈக்கள் ஊடாக பரவும் லெஷ்மேனியாசிஸ் என்ற ஒரு வகை தொற்று நோயின் தாக்கம் தற்போது இலங்கையில் அதிகளவில் பரவி வருகின்றது.
இந்த தொற்று நோயினால் சுமார் 500 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, நாச்சாதுவ, தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம மற்றும் ஒபலோகம ஆகிய பகுதிகளில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட அதிகளவிலானோர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
உலகில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொற்று நோய் பட்டியலில், இந்த நோய் 9ஆவது இடத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
லெஷ்மேனியாசிஸ் என்ற நோய், சுமார் 98 நாடுகளில் பரவியுள்ள நிலையில், இந்த நோய் தாக்கம் காரணமாக 12 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 மில்லியன் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
அத்துடன், வருடாந்தம் 20,000 முதல் 50,000 வரையான உயிரிழப்புக்கள் இந்த நோயினால் ஏற்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
லெஷ்மேனியாசிஸ் நோய் தாக்கம் தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்கும் வகையிலான திட்டங்களை இந்த மாதம் 15ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
அநுராதபுரம் விஜயபுர மாகாண சுகாதார பயிற்சி பிரிவின் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது,
எவ்வாறாயினும், லெஷ்மேனியாசிஸ் இரண்டு வகைப்படும் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
உடல் உறுப்புக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் லெஷ்மேனியாசிஸ் மற்றும் தோல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் லெஷ்மேனியாசிஸ் என இரண்டு வகையாக தொற்றுக்கள் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
இதன்படி, இலங்கையில் தோல்களை பாதிக்கும் தொற்றே தற்போது பரவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் உடல் உறுப்புக்களை பாதிக்கும் லெஷ்மேனியாசிஸ் தொற்றாளர்கள் பல வருடங்களுக்கு முன்னர் சில சந்தர்ப்பங்களில் அடையாளம் காணப்பட்டிருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
எவ்வாறாயினும், இந்த நோய் தாக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது. (TrueCeylon)