இலங்கையில் 231,000 வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே பாராளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நீதி சேவை ஆணைக்குழுவின் தரவுகளுக்கு அமைய இந்த தகவலை வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
49,801 வழக்குகள் ஐந்து வருடங்களாக விசாரணை செய்யப்படுவதாகவும், 20,568 வழக்குகள் 5 முதல் 10 வருடங்களாக விசாரணை செய்யப்படுவதாகவும், 8947 வழக்குகள் 10 முதல் 15 வருடங்களாக விசாரணை செய்யப்படுவதாகவும், 3418 வழக்குகள் 15 முதல் 20 வருடங்களாக விசாரணை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 4620 வழக்குகள் 25 முதல் 25 வருடங்களாக விசாரணை செய்யப்படுவதாக நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வழக்கு தாக்கல் செய்தல் மற்றும் வழக்கு விசாரணை ஆகியன இருவேறு விடயங்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.
கொவிட் தொற்று பரவும் காலப் பகுதியில் வழக்கு விசாரணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையின் கீழ் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் 70திற்கும் அதிகமான தீர்ப்புக்கள் இந்த காலப் பகுதியில் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார். (Trueceylon)