இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, கடந்த 11ம் திகதி மற்றும் நேற்றைய தினங்களில் இரண்டு பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இருவர் உயிரிழந்துள்ள நிலையில், நாட்டில் பதிவான மொத்த கொவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது.
பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 73 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் கடந்த 11ம் திகதி உயிரிழந்துள்ள போதிலும், அவருக்கு கொவிட் தொற்று காணப்பட்டமை நேற்றைய தினமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் வைரஸ் தாக்கத்துடன் இரத்த அழுத்தம் மற்றும் நியூமோனியா ஆகியனவே இந்த உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்ணொருவரும் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியூமோனியா நிலைமையே உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,478 ஆக அதிகரித்துள்ளது.
9017 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 24,309 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர். (TrueCeylon)