இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, இறுதியான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரித்துள்ளது.
உரிய முகவரி தெரியாத கொழும்பு பகுதியிலுள்ள 62 வயதான ஆண்ணொருவரே கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா நிலைமையே உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு 13 ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 77 வயதான ஆண்ணொருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்றுடன், நீரிழிவு நோய் காணப்பட்டமையே இந்த உயிழப்புக்கான காரணம் என கூறப்படுகின்றது.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,580ஆக அதிகரித்துள்ளதுடன், இன்றைய தினத்தில் மாத்திரம் 703 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
20,804 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ள போதிலும், கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 7634 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் கொவிட் தொற்றின் இரண்டாவது அலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000தை இன்று எட்டியது.
இதன்படி, கொவிட் 2ஆவது அலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,025ஆக பதிவாகியுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)