இலங்கையின் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6990 அடி உயரத்தில் அமைந்துள்ள மிகவும் அழகிய ஒரு பிரதேசத்தை நோக்கியே நாம் இன்று பயணிக்கின்றோம்.
இயற்கை அன்னை அழகாக காட்சியளிக்கின்ற போதிலும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையில் அணு அளவேனும் அழகு என்பது இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.
பலாங்கொடை – இம்புல்வே பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதியே நன்பேரியல்.
நன்பேரியல் பெருந்தோட்ட பகுதியின் நெட்கிரைட் பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த 38 குடும்பத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரின் வாழ்க்கையும் இன்று, இந்த நொடி வரை ஒளி பெறவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.
பலாங்கொடை நகரிலிருந்து சுமார் 35 கிலோமீற்றர் தொலைவில் மலை உச்சியில் அமைந்துள்ள இந்த பெருந்தோட்டப் பகுதிக்கு, பாரிய 34 வளைவுகளை கடந்தே செல்ல வேண்டியுள்ளது.
மாதங்கள் வெயலுடனான வானிலை நிலவும் அதேவேளை, 6 மாதங்கள் கடும் காற்றுடனான வானிலை நிலவும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அடிப்படை வசதிகள் என்றால், என்ன என்று கூட அறியாத அளவிற்கு, எந்தவொரு வசதிகளும் இன்றியே இந்த மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
போக்குவரத்து, வீட்டுத் திட்டம், வடிகான் அமைப்பு, சுத்தமான குடிநீர், மலசலக்கூடம், தொலைபேசி, வைத்தியசாலை, வர்த்தக நிலையம், பாடசாலை என ஒரு அடிப்படை வசதிகள் கூட, நன்பேரியல் பெருந்தோட்ட பகுதிக்கு இன்று வரை கிடைக்கவில்லை.
நன்பேரியல் பெருந்தோட்ட பகுதியிலிருந்து பலாங்கொடை நகருக்கு வருகைத்தந்து, மீள தமது ஊருக்கு செல்ல குறைந்தது 8000 ரூபா போக்குவரத்திற்கு மாத்திரம் செலவிட வேண்டியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதியில் வாழும் ஒரு சிலர் இன்று வரை நகரத்தை கூட கண்டதில்லை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அதிலும் நகரத்தை கண்ட சிலர், இன்று வரை தலைநகருக்கு பயணம் செய்ததில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பாடசாலைக்கு வருகைத் தர வேண்டும் என்றால், குன்றும் குழியுமான வீதியின் ஊடாக சுமார் 12 கிலோமீற்றர் பயணம் செய்ய வேண்டும் என பிரதேச மக்கள் அங்கலாய்கின்றனர்.
12 கிலோமீற்றர் செல்லும் மாணவர்கள், மீண்டும் வீடு திரும்ப அதே 12 கிலோமீற்றர் பயணம் செய்ய வேண்டியுள்ளதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.
நன்பேரியல் – நடுகணக்கு பகுதியிலுள்ள தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் வசதிக்காக, விடுதியொன்று செய்துக்கொடுக்கப்பட்ட போதிலும், அந்த விடுதிக்கு மாதாந்தம் 1500 ரூபா செலுத்த வேண்டும் என பெற்றோர் கூறுகின்றனர்.
உரிய வேலைவாய்ப்புக்கள் இல்லாத தமக்கு அந்த கட்டணத்தை கூட செலுத்துவதற்கான இயலுமை கிடையாது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனால், ஒரு வீட்டில் ஒரு பிள்ளை மாத்திரம் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய பிள்ளைகள் பாடசாலை முடிவடைந்தவுடன் தமது வீடுகளுக்கு திரும்புகின்றனர்.
இன்றும் நகரத்தை கூட காணாத பலர் இருக்கின்றார்கள் என கூறினால், நம்பத்தான் முடிகின்றதா?. ஆனால் அது தான் உண்மை….
அரசாங்கத்தினால், அரசியல்வாதிகளினால் கவனிப்பாரற்று காணப்படும் இந்த நன்பேரியல் பெருந்தோட்ட பகுதிக்கு, அகரம் அமைப்பு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய முன்வந்துள்ளது.
அண்மையில் உலர் உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கிய அகரம் அமைப்பு, எதிர்வரும் காலங்களிலும் பல்வேறு உதவித் திட்டங்களை வழங்க முன்வந்துள்ளதாக அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)