தேயிலை செய்கையை விடவும், கஞ்சா செய்கையின் ஊடாக பெருமளவிலான வருமானத்தை நாட்டிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என்பது பலரது எண்ணம் என பிரபல சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேயிலைக்கு பதிலாக கஞ்சா வளர்ப்போம்? என்ற தலைப்பில் இன்று இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கஞ்சா இலங்கையில் இன்றும் தடை செய்யப்பட்ட செய்கையாக காணப்படுகின்றது.
உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சா செய்கைக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இலங்கையிலும் கஞ்சா செய்கை தொடர்பில் புதிய கருத்து பகிர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் கஞ்சா தொடர்பில் வெள்ளையர்களினால் வகுக்கப்பட்ட 85 வருடங்கள் பழைமையான சட்டமே இன்றும் காணப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
1935ம் ஆண்டு சட்டத்தின் பிரகாரம், கஞ்சா செய்கை செய்தல், தன்வசம் வைத்திருத்தல், விற்பனைசெய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
1961ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, கஞ்சாவை, போதைப்பொருள் மற்றும் நஞ்சு தன்மை வாய்ந்த ஓளடதங்கள் பட்டியலுக்குள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பட்டியலில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.
எனினும், 2019ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, கஞ்சாவை அந்த பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கஞ்சா செய்கை குறித்து அகில இலங்கை உள்நாட்டு மருத்துவ சங்கத்தின் ஆலோசகரும், ஆயுர்வேத சபையின் முன்னாள் ஆவண காப்பாளருமான விசேட ஆயுர்வேத வைத்தியர் டெனிஸ்டன் பெரேரா கருத்து வெளியிட்டுள்ளார்.
”உண்மையில் கஞ்சா பூ மற்றும் கஞ்சா பசையை மாத்திரமே போதைப்பொருளுக்காக பயன்படுத்துகின்றனர். கஞ்சா விதைகள் மற்றும் கஞ்சா பட்டைகள் மருத்துவ குணம் மற்றும் உணவுக்கான தன்மை கொண்டது. அதற்கும் மேலதிகமாக பொருளாதார ரீதியிலான செய்கையாக முன்னெடுக்கலாம். அதனூடாக எண்ணி பார்க்க முடியாதளவு பயன்பாட்டை பெற முடியும். அபிவிருத்தி அடைந்த நாடுகள், அரசாங்கத்தின் அனுசரணையுடன் இதனை வணிக செய்கையாக முன்னெடுக்கின்றன” என அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் ஆயுர்வேத வைத்தியர்களுக்கு மாத்திரம், மருத்துவத்திற்காக கஞ்சா வளர்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், ஜமேகா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளின் பிரதான வருமான மார்க்கமாக கஞ்சா செய்கை காணப்படுகின்றது என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எமது நாட்டின் காலம் காலமாக இருக்கின்ற பிரதான ஏற்றுமதி செய்கையான தேயிலை தொழிற்துறை வீழ்ச்சி கண்டுள்ள பின்னணியில், உலகில் அதிக கேள்வி காணப்படுகின்ற கஞ்சாவை சட்டமயமாக்கி, அதனை ஊக்குவித்தால், தேயிலை ஏற்றுமதியை விடவும், பெருமளவிலான வருமானத்தை நாட்டிற்குள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே அதிகளவிலானோரின் எண்ணம் என குறித்த செய்தியில் கூறப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post