இலங்கை வானொலித்துறை என்பது சர்வதேச அரங்கில் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று என்றால் அது மிகையாகாது.
அரச வானொலிகளில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலி வரலாறு, பின்னரான காலத்தில் தனியார் வானொலிகளும் வரலாற்று களத்தில் இடம்பிடித்திருந்தன.
தனியார் வானொலிகள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, 2 தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கையில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான தமிழ் தனியார் வானொலிகளே காணப்படுகின்றன.
சக்தி, சூரியன், ஸ்டார் தமிழ், கெபிட்டல் ஆகிய நான்கு வானொலிகள் மாத்திரமே தனியார் துறை சார் வானொலிகளாக இன்று ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இந்த நான்கு வானொலிகளின் பயணித்தில், விரைவில் புதிதாக தமிழ் வானொலி சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
99.5 மற்றும் 99.7 ஆகிய பண்பலைகளில் தற்போது பரீட்சார்த்த ஒலிபரப்பாக ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த வானொலிக்கு, இதுவரை பெயர் சூட்டப்படவில்லை.
பெரும்பாலானோர் இந்த வானொலியின் பெயர் என்ன என்பது தொடர்பில் வினவி வருகின்ற நிலையில், ட்ரூ சிலோன் இது தொடர்பில் ஆராய்ந்தது.
தாம் ஆங்கிலத்திலான பெயரை சூடுவதில் விருப்பம் கொள்ளவில்லை என கூறிய அந்த நிறுவனத்தின் உயர்பீடம், அழகிய தமிழ் பெயர் சூட்டப்பட்டு, விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டது.
அழகிய தமிழ் பெயருடன் ஒலிக்கவுள்ள இந்த வானொலியின் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விடயம் தொடர்பிலும் எமது செய்திப் பிரிவு ஆராய்ந்தது
பெரும்பாலும் பெப்ரவரி மாத நடுப்பகுதிக்குள் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த வானொலியின் தலைமைத்துவம் ஹோஷியா அல்பிரட் வசமாகியுள்ளது.
இலங்கையில் முதல் தடவையாக பெண் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் வானொலியொன்று ஆரம்பிக்கப்படுகின்றது.
மேலும், சக்சிவர்ணன் (RJ சக்சி), ஆர்.ரமேஷ், அப்ஷான், கிரிஜா உள்ளிட்ட முக்கிய அறிவிப்பாளர்கள் இந்த வானொலியுடன் கைக்கோர்த்துள்ளனர்.
உத்தியோகப்பூர்வமாக இந்த வானொலி பெப்ரவரி மாதம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள போதிலும், திகதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என அறிய முடிகின்றது.
இளைஞர்களை இலக்காகக் கொண்டு, இளைய சமூகத்தின் நாடித்துடிப்பை அறிந்து இந்த வானொலி வீர நடை போடவுள்ளதாக தெரியவருகின்றது.
அதேபோன்று, உள்நாட்டு தமிழ் கலைஞர்களுக்கு, இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் வானொலிகளும் ஆதரவை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமது வானொலி அமையும் என்பதே அந்த நிறுவனத்தின் ஓங்கிய குரலாக இருக்கின்றது.
விரைவில் தமிழ் மொழியில்… தமிழ் வானொலியை செவி மடுக்க முடியும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்… (TrueCeylon)
Discussion about this post