இலங்கையில் மிக பிரமாண்ட டயர் உற்பத்தி தொழிற்சாலையொன்றை ஆரம்பிப்பதற்காக 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டை செய்யும் வகையிலான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சீனாவின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமொன்றுடன், இலங்கை முதலீட்டு சபை நேற்றைய தினம் (19) இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் சந்தர்ப்பத்தில் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான புதிய சீன தூதுவர் ஆகியோரும் இணைந்துக்கொண்டுள்ளனர்.
உடன்படிக்கை கைச்சாத்திடும் சந்தர்ப்பத்தை சீனாவிலிருந்த, SHANDONG HAOHUA TYRE CO. LTD நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, விமான நிலையங்கள் மற்றும் முதலீட்டு வலய அபிவிருத்தி அமைச்சர் டி.வீ.ஷானக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் ஆகியோரும் இந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியுள்ளனர்.
இலங்கையில் டயர் உற்பத்தி மற்றும் டயர் ஏற்றுமதிக்காக, உலகின் தலை சிறந்த டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான SHANDONG HAOHUA TYRE CO. LTD நிறுவனத்துடன், இலங்கை முதலீட்டு சபை இந்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளது.
ஏற்றுமதியை முழுமையாக இலக்கு வைத்து இந்த டயர் உற்பத்தி நிறுவனம் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஸ் மற்றும் லொறி போன்ற வாகனங்களுக்காக டயர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சிறிய ரக வாகனங்களுக்காக டயர்களும் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையை ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை விமான நிலையம் ஆகியவற்றை அண்மித்துள்ள 121 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதன் ஊடாக 2000திற்கும் அதிகமாக நேரடி வேலைவாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளன.
இலங்கையிலிருந்து ஒரு டொலர் பில்லியன் பெறுமதியான இறப்பர் வெளிநாடுகளுக்கு தற்போது ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2025ஆம் ஆண்டாகும் போது, அதனை 2 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படுகின்றது.