மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்ட விதம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோய் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த விசாரணைகளின் ஊடாக வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த நபரொவரின் ஊடாக இந்த தொற்று மீண்டும் ஏற்பட்டிருக்கலாம் என கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சீதுவ ராமதா ஹோட்டலில் தங்கியிருந்த யுக்ரேன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமான பணியாளர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதனைத் தொடர்ந்து, ஹோட்டல் ஊழியர்களுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.
ஹோட்டல் ஊழியர்களுக்கும், மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததாகவும், அதனூடாகவே இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் கருத்து வெளியிட்டார்.
மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிய 1500 பேரில், 400 பேருக்கு மாத்திரமே கொவிட் தொற்று ஏற்படவில்லை என அவர் கூறினார்.
இவ்வாறு கொவிட் தொற்று ஏற்படாதவர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த தரப்பினருக்கு ஏற்கனவே கொவிட் தொற்று இருந்துள்ளதா என்பதை கண்டறிவதற்காகவே இந்த அன்ரிஜன் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் 8 வெளிநாட்டவர்கள் பணிப்புரிந்து வருவதாகவும், அவர்களில் ஒருவர் மாத்திரமே இந்த ஆண்டு வெளிநாட்டிற்கு சென்று நாடு திரும்பியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு நாடு திரும்பியவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, உரிய சுகாதார வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்தியாவின் விசாகப்பட்டினம் பகுதியிலுள்ள பிரென்டெக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 500 இலங்கையர்கள் பணிப்புரிந்து வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
விசாகப்பட்டினத்தில் பணிப்புரியும் இலங்கையர்களில் 341 பேர் நாட்டிற்கு திரும்பியுள்ளதாகவும், அவர்களில் 10 பேருக்கு மாத்திரமே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், குறித்த 341 பேரும் இலங்கையிலுள்ள எந்தவொரு பிரென்டெக்ஸ் ஆடைத் தொழிற்சாலைக்கும் செல்லவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார். (TrueCeylon)