இறக்குவானையில் வலுவடைந்துள்ள கொவிட் தொற்று பிரச்சினை குறித்து கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கொடகவெல பிரதேச சபையின் தலைவர் பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இறக்குவானை மற்றும் அதனை அண்மித்த பகுதியில் இதுவரை 27 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், இறக்குவானை பகுதி முடக்கப்படுமா என வினவிய போது, அது தொடர்பிலான தீர்மானத்தை தம்மால் எடுக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
கொவிட் வைரஸ் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், பிரதேசமொன்றை முடக்குவதற்கான தீர்மானத்தை கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையமே எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அதனால், இறக்குவானை தொடர்பிலான தகவல்களை கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.
எவ்வாறாயினும், கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், சுமார் 200 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்த வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் கொடகவெல பிரதேச சபையின் தலைவர் பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார். (TrueCeylon)