இறக்குவானையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளதாக இறக்குவானை பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.
இறக்குவானையில் இன்றைய தினத்தில் (25) மாத்திரம் புதிதாக 4 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், இறக்குவானையில் மொத்தமான 21 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில், இறக்குவானை தமிழ் பாடசாலையொன்றின் ஆசிரியை ஒருவரும் அடங்குவதாக அவர் கூறுகின்றார்.
மேலும் சிலரது பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்க வேண்டியவுள்ளதாகவும், விரைவில் அந்த அறிக்கை கிடைக்கப் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வெளியான பி.சி.ஆர் அறிக்கைகளின் பிரகாரம், 18 பேருக்கு கொவிட் தொற்று கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இறக்குவானையில் நடைபெற்ற இருவேறு திருமண நிகழ்வுகளின் ஊடாகவே இந்த கொவிட் தொற்று பிரதேசத்தில் பரவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொடகவெல பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில், இறக்குவானையிலேயே அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி கூறுகின்றார்.
பிரதேசத்திலிருந்து கொவிட் தொற்றை முழுமையாக இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார். (TrueCeylon)