இரத்தினபுரி நகரில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவ ஆரம்பித்துள்ளதை அடுத்து, இரத்தினபுரி நகர் எல்லைக்குள் காணப்படுகின்ற 3 பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி நகரிலுள்ள அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் வெள்ளிகிழமை ஜும்பா தொழுகையை நடத்தாதிருப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்புக்கான இரத்தினபுரி மாவட்ட செயலணி இன்று (17) மாலை அவசரமாக கூடி கலந்துரையாடல்களை நடத்திய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவிக்கின்றார்.
இரத்தினபுரி குடுகல்வத்த பகுதியில் 20 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 7 பேருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இரத்தினபுரி நகர் எல்லைக்குள் உள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் நாளைய தினம் (18) மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் பக்தர்கள் இன்றி ஜும்மா தொழுகையை நடத்துமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி செலான் வங்கி சந்தி முதல் டிப்போ சந்தி வரையான அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வர்த்தக சமூகத்தின் நலனை கருத்திற் கொண்டு வர்த்தக நிலையங்களை மூடுமாறு அனைத்து வர்த்தகர்களிடமும், கொரோனா வைரஸ் தடுப்புக்கான இரத்தினபுரி மாவட்ட செயலணி கோரிக்கை விடுக்கின்றது.
இரத்தினபுரியில் தற்போது காணப்படுகின்ற அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு, இரத்தினபுரி நகரிலுள்ள 3 பாடசாலைகளை நாளைய தினம் (18) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மூட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இரத்தினபுரி சிவலி மகா வித்தியாலயம், கொடிகமுவ தர்மராஜா வித்தியாலயம், இரத்தினபுரி அல்மகியா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே மூடப்படுகின்றன.
இரத்தினக்கல் வியாபாரிகளை ஒன்று திரள வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி நகரிலுள்ள வீதியோர சிறு வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி கொடிகமுவ பகுதி தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 572 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (TrueCeylon)
News Sources :- LankaDeepa