உதவும் கரங்கள் அமைப்பில் உதவித் திட்டத்தின் கீழ் இரத்தினபுரியில் முதலாவது ஆடைத் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி – ஹப்புகஸ்தென்ன – கல்லெல்ல – டேனாகந்த பகுதியில் இந்த ஆடைத் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடைத் தொழிற்சாலை இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
10 லட்சம் ரூபா செலவில் இந்த ஆடைத் தொழிற்சாலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக உதவும் கரங்கள் அமைப்பு தெரிவிக்கின்றது.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு, தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள மலையக இளைஞர், யுவதிகளுக்கு சுய தொழில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டமொன்றை உதவும் கரங்கள் அமைப்பு முன்னெடுத்துள்ளது.
”சொந்த ஊரில் சொந்த தொழில் செய்வோம். சொந்த காலில் நிற்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் முதற்கட்டமாகவே, இந்த ஆடைத் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.
கொவிட் தொற்று காரணமாக இரத்தினபுரியில் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள இளைஞர், யுவதிகளின் வறுமை நிலைமையை போக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.
முதற்கட்டமாக 20 இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாகவும், எதிர்வரும் காலங்களில் அதனை விஸ்தரித்து, பெரும்பாலான இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் உதவும் கரங்கள் அமைப்பு தெரிவிக்கின்றது.
எதிர்வரும் காலங்களில் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கின்ற அந்த அமைப்பு, தம்முடன் ஏனையோரையும் கைக்கோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றது. (TrueCeylon)
PHOTO CREDIT :- MALAYAGAM.LK