இந்து ஆலய சிவாச்சாரியார்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், சர்வதேச இந்து மத பீடத்தினருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமநாத குருக்கள் மற்றும் உபத் தலைவர் இராமநாத திருச்செந்தில்நாதன் குருக்கள் ஆகியோர் மாளிகாவத்தையிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று அமைச்சரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
ஆலயங்களில் பணிப்புரியும் ஆலய சிவாச்சாரியார்களுக்கு சமூக பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்க அங்கீகாரத்தை வழங்கும் வகையில் சிவாச்சாரியார்களுக்கு சமாதான நீதவான் பதவியை வழங்கி கௌரவிக்க வேண்டும் என அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிவாச்சாரியார்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் முதற்கட்டமாக 50 வீடுகளை கொண்ட அந்தணர் குடியிருப்பு தொகுதியொன்றை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே, சிவாச்சாரியார்களுக்கு தேவையான அங்கீகாரம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். (TrueCeylon)