ஜனவரி மாதம் 26ம் திகதிக்கு பின்னர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியான ”ஏஸ்கா சேனிகா” தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வர முடியும் என கொவிட் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் அந்த நாட்டு மக்களுக்கு ஏற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் 26ம் திகதிக்கு பின்னர், வெளிநாடுகளுக்கு, குறித்த தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய இந்தியா தீர்மானித்துள்ளது.
இந்த தடுப்பூசி நாட்டிற்கு கிடைக்கப் பெற்றதன் பின்னர், குறித்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் விதம் தொடர்பிலான திட்டம் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு பூராகவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 1050 சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாமையினால், சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை 4000 வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையங்களில் கட்டில்கள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளும் தயார்படுத்தப்படுவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தடுப்பூசி ஏற்றப்படும் போது, ஏதேனும் ஒரு நபர் சுகயீனமடைவாராயின், அவருக்கான சிகிச்சைகளை உரிய முறையில் வழங்குவதற்காகவே இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
முழு சனத் தொகையில் 20 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இலங்கையில் 38 லட்சம் மக்கள் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பெறுகின்றார்கள் என கூறப்படுகின்றது.
இந்த தரப்பினர், தேர்தல் செயலகத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகங்களின் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.
ஒரு மத்திய நிலையத்தில் நாளொன்றுக்கு 250 பேருக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அறிய முடிகின்றது
இந்த திட்டத்தின் பிரகாரம், நாட்டில் தெரிவு செய்யப்படும் 20 சதவீதமானோருக்கு 3 நாட்களில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கான பயிற்சிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இந்த தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை அழிப்பதற்கான திட்டமொன்றும் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றது. (TrueCeylon)
Discussion about this post