இத்தாலியின் மிலான் நகரிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த நிலையில், கண்டியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
கண்டி ஹோட்டல் அறைக்குள் குறித்த பெண் உயிரிழந்த நிலையில், நேற்று முன்தினம் (01) அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாலியின் மிலான் நகரிலுள்ள அவரது கணவர் இந்துனில் திப்தி குமார என்பவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
52 வயதான தம்மிக்கா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது மனைவி சுகயீனமுற்ற நிலையில், இலங்கைக்கு பயணித்ததாகவும், அவரது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த முதலாம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரது கணவர் கூறியுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு செல்வதற்கு லட்சக்கணக்கான பணம் அறவிடப்படுவதாகவும், தனிமைப்படுத்தல் காலத்தில் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை என்றால், அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் அவரது கணவர் குறிப்பிடுகின்றார்.
தனது மனைவி தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவில்லை எனவும், மனிதர்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் அவரது கணவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகளை நடத்தி, நியாயத்தை பெற்றுத் தருமாறு தான் அதிகாரிகளிடம்கோரிக்கை விடுப்பதாக இத்தாலியிலுள்ள அவரது கணவர் கேட்டுக்கொண்டுள்ளார். (TrueCeylon)
Discussion about this post