இலங்கை : யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மீது, இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நடு கடலில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்திய மீனவர்கள், இலங்கை மீனவர் மீது வாள் வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.
வல்வெட்டித்துறை – கோவில் அடி பகுதியைச் சேர்ந்த 46 வயதான அப்புலிங்கம் அமிர்தலிங்கம் என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியிலிருந்து சுமார் 11 கடல் மைல் தொலைவில் வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவரின் படகை, 3 இந்திய மீனவப் படகுகள் அண்மித்துள்ளன.
குறித்த படகுகளிலிருந்த இந்திய மீனவர்கள், திடீரென இலங்கை மீனவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, இலங்கை மீனவர் வசமிருந்த ஜீ.பி.எஸ் கருவி மற்றும் தொலைபேசி ஆகியவற்றை இந்திய மீனவர்கள் எடுத்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு எடுத்து செல்லப்பட்ட உபகரணங்களை இந்திய மீனவர்கள் கடலில் வீசியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இலங்கை மீனவரின் படகின் இயந்திரத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த மீனவர் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை உரிய முறையில் நடத்துமாறு யாழ்ப்பாணம் – வடமராட்ச்சி மீனவ சங்கத்தின் தலைவர் எஸ்.வர்ணகுலசிங்கம், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகத்திலும், யாழ்ப்பாணம் கடற்றொழில் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post