அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், இரண்டு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜீ புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களில் மகாநாயக்க தேரர்களை இன்று (11) சந்தித்து ஆசிப் பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, கொவிட் நிலைமை தொடர்பிலான சுகாதார பிரிவின் ஆலோசனைகளை பெற்று, இரண்டு அல்லது இரண்டரை மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நியாயமானது, சுதந்திரமானதுமான தேர்தலொன்றை நடத்துவதற்காக தம்மால் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் சில உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகளுக்காக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
தேர்தலில் வாக்களிப்பதற்கு அனைவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என கூறிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக வைத்தியர்களுக்கு தேர்தல் தினத்தில் வாக்களிக்க முடியாத சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், அவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்புக்கான சந்தர்ப்பமும் சட்டத்தில் கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் கோருகின்றார்.
ஊடகவியலாளர்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இழக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜீ புஞ்சிஹேவா கூறுகின்றார்.(TrueCeylon)
Discussion about this post