அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் வசிக்கும் இலங்கை ஊடகவியலாளரான யுரேகா டி சில்வா, நாட்டிற்கு வருகைத் தந்தவுடன் கைதுசெய்யுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (24) இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சிரச நியூஸ் பெஸ்ட் நிறுவனத்தில் கடமையாற்றிய யுரேகா டி சில்வா, பேஸ்புக்கில் பதிவொன்றை மீள் பதிவிட்டமையை அடிப்படையாகக் கொண்டே அவரை கைது செய்ய திட்டமிடப்படுவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
தேவையேற்ற விடயங்கள் தொடர்பில் பின்தொடர்வதை தவிர்த்து, நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினை குறித்து அவதானம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்றிணைந்து செய்வோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதைவிடுத்து, ஊடக அடக்குமுறை, சமூக ஊடக அடக்குமுறை, கருத்து தெரிவிப்போரை பின்தொடர்தல், கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என திஸ்ஸ அத்தநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.