இலங்கையில் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம், முஸ்லிம்களுக்கு மற்றுமொரு சட்டம் என பிரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கனடா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் ஒரு சட்ட மசோதா, இலங்கையில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கிறது என சுரேன் ராகவன் தெரிவித்துள்ள பின்னணியிலேயே, மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் தேசிய நல்லிணக்கம் இருக்கின்றதா என சுரேன் ராகவனிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
”ஒரே நாடு, ஒரே சட்டம்” என அரசாங்கம் கூறி வருகின்ற நிலையில், சிறைத் தண்டனை கைதியான பௌத்த தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைப்பதாக கூறிய மனோ கணேசன், தமிழ் கைதிகளுக்கு அது கிடைப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நாட்டில் சிங்களவருடன் சேர்ந்து வாழவே தமிழரும், முஸ்லிம்களும் விரும்புகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அரசாங்கத்தின் சட்டம் சிங்களவருக்கு ஒன்று, தமிழருக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு என்றல்லவா இருக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவா தேசிய நல்லிணக்கம் என சுரேன் ராகவனை நோக்கி கேள்வி எழுப்பிய மனோ கணேசன், அரசாங்கத்திடம் இல்லாத ஒன்றிற்காக மாறடிக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post