இலங்கையின் நாணய பரிவர்த்தனை வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்கா டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபாவை எட்டியுள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில் அமெரிக்கா டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 200.46 ரூபாவாகும்.
கொவிட் 19 தாக்கம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதல் இன்று வரை 18.02 ரூபாவால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
சீனாவை சேர்ந்த பெண்ணொருவருக்கு இலங்கையில் முதன்முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டமை கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்னர் சுமார் ஒன்றரை மாதங்களின் பின்னரே அடுத்த கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.
ஜனவரி மாதம் 27ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 181.44 ரூபாவாக காணப்பட்டது.
அதேநேரம், ஒன்றரை மாதம் கடந்து, அதாவது மார்ச் மாதம் 11ஆம் திகதியாகும் போது அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 182.44 ருபாவாக பதிவாகியதை இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல் இன்றைய தினம் (08) வரை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.
குறிப்பாக இந்த கால கட்டத்தில் மாத்திரம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.02 ரூபாவால் வீழ்ச்சி அடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கை நாணய பரிமாற்று வரலாற்றில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இவ்வாறான வீழ்ச்சியை கண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.