பாடசாலைகளின் நடவடிக்கைகள் குறித்து தீர்மானத்தை எட்டுவதற்கான ஒவ்வொரு பாடசாலைகளிலும் குழுவொன்றை நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் தொடர்பில் பாடசாலைகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில், ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஸ்தாபிக்கப்படும் குறித்த குழு தீர்மானத்தை எட்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, ஒவ்வொரு பாடசாலைகளிலும் அதிபர் தலைமையில் குழுவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
பாடசாலைகள் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு அந்தந்த பாடசாலைகளின் அதிபர் தலைமையிலான குழுவொன்றிற்கு வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த குழுவில் பாடசாலையின் அதிபர், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கிராம உத்தியோகத்தர், பாடசாலை அபிவிருத்தி குழுவின் அங்கத்தவர்களில் ஒருவர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர்களில் ஒருவர் அடங்குவதாக அவர் கூறுகின்றார்.
இவ்வாறு நியமிக்கப்படும் குழுவே, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து தீர்மானத்தை எட்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த குழுவினால் எட்டப்படும் தீர்மானத்தை வலய கல்வி பணிப்பாளர் ஆராய்ந்து, இறுதித் தீர்மானத்தை எட்டுவார் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.